திட்டம்

சிங்கப்பூர்த் தமிழ் 2015 திட்டம், சிங்கப்பூர்த் தமிழ் சார்ந்த மின் வளங்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மின்மரபுடைமைக் குழுவின் செயல் திட்டங்களுள் ஒன்று. இந்த வரலாற்றுத் தொகுப்புகள், நீண்ட காலப் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி நிகழ்காலத் தேவைகளையும் நிறைவேற்ற உருவாக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் அரசாங்கமும் வேறுபல நிறுவனங்களும் தமிழைப் பல்வேறு வகைகளில் பயன்படுத்திவருகின்றன. ஆனால் அந்தப் பயன்பாடு எவ்வளவு பரவலானது என்பதை யாரும் அறிந்தாரில்லை. அந்தப் பயன்பாட்டை ஆவணப்படுத்தும் கன்னி முயற்சி இது. சிங்கப்பூர்த் தமிழ் 2015, சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 50ம் ஆண்டு நிறைவு ஆண்டான 2015ல் பொது இடங்களில் உள்ள தமிழ்ப் பயன்பாட்டைப் பிரதிபலிப்பதாகும். இத்திட்டம், முழுமையானதோ பரவலானதோ அன்று. நூற்றுக்கணக்கான பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு பகுதியே ஆகும். இருப்பினும், பன்மொழிக் கொள்கைபற்றிப் பெருமிதம்கொள்ளும் இந்நாட்டில் தமிழின் பரவலான பயன்பாட்டை இந்த முன்னோடித் தொகுப்பு பறைசாற்றுகிறது. சிங்கப்பூரின் பொது இடங்களில் தமிழின் பயன்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த எண்ணமுள்ளது.

இத்திட்டம், பல முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது: இது, பல்வேறு சூழல்களில் தமிழ்மொழி எவ்வாறெல்லாம் புழங்கப்பட்டுள்ளது என்பதை வகுப்பறையில் கற்பிக்க உதவும் கருவூலமாக இருக்கும். தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் கடந்த கால மொழிபெயர்ப்புகளிலிருந்து கற்றுக்கொள்ளச் சிறந்ததொரு வழிகாட்டித் தொகுப்பாகவும் விளங்கும். அது மட்டுமின்றி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் வரலாற்று ஆவணமாகவும் திகழும்.

முழுதும் தொண்டூழியர்களைக் கொண்ட பணிக் குழு, இத்திட்டத்தின் முதற்கட்டத்தை முடிப்பதற்கு ஓராண்டு எடுத்துக்கொண்டது. செயல்முறை குறித்த தகவல்களையும் பணிக்குழுவினர் குறித்த மேல் விவரங்களையும் இத்தளத்தின் பிற பக்கங்களில் காணலாம்.

இத்தொகுப்பு, 2016ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 18ம் தேதி தேசிய நூலக வாரியக் கட்டடத்தில், கல்வி அமைச்சின் தாய்மொழிகள் பிரிவைச் சேர்ந்த துணை இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன் அவர்களால் வெளியிடப்பட்டது.

 About

The Singapore Tamil 2015 archival project is part of on-going efforts by the Tamil Digital Heritage Group (TDHG) to create digital archives of Singapore Tamil. These historic collections are not only meant for posterity but for current use as well.

The Singapore government and other institutions have been using Tamil in many contexts yet no one knows how extensive the usage has been. This is the first effort to document such usage. Singapore Tamil 2015 features Tamil usage in public domains in the year 2015, the Golden Jubilee year. It is not exhaustive or comprehensive. Only a selection from numerous such instances. Yet, this unprecedented collection demonstrates how extensive Tamil usage is in this country which takes much pride in its multilingualism. TDHG intends to repeat this exercise every five years from 2015 to keep regular track of Tamil usage in public domains in Singapore.

The project serves several key purposes: It is a rich resource for teaching Tamil in different contexts in the class room. It is a reference point for translators to learn from past translations. It is also designed as a historical record that will be updated every five years.

Entirely made up of volunteers, the project team took about a year to complete this first edition. More details of the processes and the people involved are found elsewhere in this site.

This collection was inaugurated by Guest Of Honour Mdm Santhi Sellappan, Deputy Director, Mother Tongue Languages Branch, Ministry of Education, on 18 December 2016 at the National Library.